×

நெல்லை அரசு மருத்துவமனையில் நாங்குநேரி மாணவனுக்கு 2 கைகளில் அறுவை சிகிச்சை: சென்னை சிறப்பு மருத்துவ குழு செய்தது

நெல்லை: நெல்லை அரசு மருத்துவமனையில் நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவன் சின்னத்துரையின் 2 கைகளிலும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. நெல்லை மாவட்டம், நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர், முனியாண்டி மகன் சின்னத்துரை (17), அவரது தங்கை சந்திராசெல்வி(13) ஆகியோரை கடந்த 9ம் தேதி இரவு வீடு புகுந்து சக மாணவர்கள் சிலர் அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரும் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையைச் சேர்ந்த பிளாஸ்டிக் மற்றும் கை அறுவை சிகிச்சை துறைத் தலைவர் ஸ்ரீதேவி, மருத்துவ கண்காணிப்பாளர் மகேஷ், இணை பேராசிரியர் தர் ஆகியோர் நெல்லை பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு வந்து மாணவன் சின்னத்துரையை பரிசோதனை செய்தனர். இதையடுத்து அவருக்கு 2 கைகளிலும் 3 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்தனர்.

இதுகுறித்து மருத்துவக் குழுவினர் மற்றும் நெல்லை மருத்துவக்கல்லூரி டீன் ரேவதி பாலன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: இடது கையில் 3 இடத்தில் வெட்டுக்காயம், வலது கையில் ஒரு இடத்தில் வெட்டுக்காயம் உள்ளது. மொத்தம் 7 முதல் 8 இடங்களில் வெட்டுக்காயம் உள்ளது. சிறப்பு நிபுணர் குழுவினர் தொடர்ந்து மாணவனை கண்காணித்து வருகின்றனர். மாணவனுக்கு குறைந்தபட்சம் 4 வாரங்களுக்கு ஓய்வு தேவை. 4 வாரங்கள் மாவு கட்டில்தான் இருப்பார். அதன்பிறகே பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் அடுத்த கட்ட நிலை தெரிய வரும். மாணவனின் தங்கை தற்போது நன்றாக உள்ளார். அவருக்கு தசைநார் மட்டும் உருவி இருந்தது. மாணவனுக்கு மனநல கவுன்சலிங் கொடுத்த பிறகு நன்றாக இருக்கிறது. கிருமித் தொற்று வராத பாதுகாப்பான அறையில் இருவரையும் வைத்துள்ளோம். எனவே பார்வையாளர்கள் வருவதை குறைத்துக் கொண்டு, சிகிச்சைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post நெல்லை அரசு மருத்துவமனையில் நாங்குநேரி மாணவனுக்கு 2 கைகளில் அறுவை சிகிச்சை: சென்னை சிறப்பு மருத்துவ குழு செய்தது appeared first on Dinakaran.

Tags : Nanguneri ,Nellai Government Hospital ,Chennai Special Medical Team ,Nellai ,Chinnathurai ,Nellai… ,Dinakaran ,
× RELATED கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள்...